Sunday 31 May 2020

Key to awareness

பொதுவாகவே எனக்கு எப்போதும் மனோதத்துவம், ஆளுமைத்திறன், சுயமுன்னேற்றம் போன்றவை தொடர்பான புத்தகங்கள் என்றாலே ஆகாது. தன்னளவில் முழுமை பெறாத மனிதன் பிறருக்கு வழிகாட்டுவது என்பது கூடாத ஒன்று என்ற கருத்தில் வேரூன்றி இருந்தவன். காரணம் நான் படிக்க நேர்ந்த ஓரிரு புத்தகங்கள். 

மிகவும் பரந்த அளவு வாசிக்கும் பழக்கம் உடைய நான் தற்போது ஏறக்குறைய ஓராண்டுகாலமாக ஓஷாே, ஜகி மற்றும் சேட்டன் பகத்துடன் சில அரசியல் தொடர்பான புத்தகங்களுடன் சுருக்கிக்கொண்டேன்.

முகநூலில் உலவிக்கொண்டிருந்தபோது கீர்த்தனாவின் Key to awareness புத்தகம் பற்றி அறிய நேர்ந்தது. எனக்கு கீர்த்தனா எட்டாம் வகுப்பில் பள்ளி தோழர். கீர்த்தனா ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு, அதுவும் Guide to overcome life problems எழுதும் அளவுக்கு வாழ்வில் முன்னெடுத்து சென்றுள்ளாரா என்ற வியப்பிடனேயே புத்தகத்திற்கு வேண்டுதல் அனுப்பி காத்திருந்தேன். நம் வகுப்பு தோழர் ஒரு புத்தகத்தின் ஆசிரியரா என்ற மகிழ்ச்சியும் அவர் என்ன எழுதி கிழித்திருப்பார் என்ற ஆர்வம் மட்டுமே இருந்ததேயல்லாமல் புத்தகம் குறித்த ஆர்வம் துளியுமில்லை. 

ஆனால் இன்றுதான் புத்தகம் கிடைத்தது. பக்கங்கள் புரள புரள என் முன்முடிவுகள் அனைத்தும் தகர்ந்துபோய்விட்டது. மிகைபடுத்தாமல் கூறினால் இது ஒரு அற்புதமான படைப்பு. இதற்கு பின் இருக்கும் கண்டிப்பாக கடுமையான உழைப்பு. 

பொதுவாக இதுபோன்ற புத்தகங்கள் வெறும் போதனையாகவே இருக்கும். ஆனால் இந்த புத்தகத்தில் இதன் ஆசிரியர் மாற்றத்திற்கு தேவையான கருவிகளையும் வழங்கியிருக்கிறார். பாராட்டுக்கள். இந்நூல் இவரது முதல் படைப்பு என்பதை நம்ப முடியவில்லை. மிக நேர்த்தி. என்றும் நான் தவற விடாத மாலை நேர யோக பயிற்சி இந்த புத்தகத்தை மூடி கீழேவைக்க முடியாத காரணத்தால் தவறி விட்டது. கண்டிப்பாக இந்த வழிகாட்டி அனைவரது கையிலும் இருக்க வேண்டும். உங்களிடம் மேலும் பல படைப்புகளை எதிர்நோக்குகிறோம். வாழ்த்துக்கள்.

Saturday 4 March 2017

ஏன் இந்து வலைப்பூ:


ஏன் இந்த வலைப்பூ:

1) நான் பயணங்களில் பேரார்வம் கொண்டவன். பயணங்களின் வாயிலாக கற்பதையும், அனுபவங்கள் மூலமாக கற்பதையும், மக்களிடமிருந்து கற்பதையுமே உண்மையான கல்வியாக நம்புபவன். மற்றவையெல்லாம் திணிக்கப்பட்ட குப்பைதான் என்பதை என் தனிப்பட்ட கருத்தாக கொண்டவன். என் பயணங்களில் நான் கற்றவை, நான் சந்தித்த மக்களிடம் நான் பெற்றவை, என் அனுபவங்கள் எனக்கு வழங்கியவை ஆகியவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஒரு எளிய ஊடகமாக இந்த வலை பூ இருக்கும். பகிர்தலின் மூலம் நாம் எதையும் இழப்பதில்லை நாம் பெறவே செய்கிறோம் என்பதை நான் நம்புகிறவன். வாருங்கள் உறவுகளே நம்மை நாம் பகிர்ந்துகொள்வோம். 

2) நாம் வாழும் இந்த சம காலத்திலும் பல உன்னத மனிதர்கள், புரட்சியாளர்கள், தலைவர்கள், போராளிகள், வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். மக்கள் நலனுக்காக, மண்ணின்  நலனுக்காக, மாபெரும் வேலைகளை செய்துவிட்டு சத்தமில்லாமல் அடுத்த வேலை நோக்கி ஓடி கொண்டு இருப்பவர்கள் பலரும் இருக்கிறார்கள். ஆள், அம்பு, சேனை கொண்டு விளம்பர வெளிச்சத்தில் செய்யும் சாதனைகளை மட்டும் சொல்லாமல் தன் அன்றாட வாழ்வோடு அடுத்த தலைமுறையின் வாழ்விற்காகவும் உழைக்கும் அந்த எளிய மனிதர்களை பற்றிய பதிவாகவும் இந்த வலை பூ இருக்கும். 

3) எனவே இந்த உலகில் நடக்கும் எல்லா  நிகழ்ச்சிகளுக்கு நானும் ஒரு பங்கேற்பாளனாகவோ, பார்வையாளனாகவோ உங்களோடு பயணிக்கும் போது அது குறித்த என் பார்வைகளை யாருக்கோ கடத்த ஒரு ஊடகமும் தேவைபட்டதால் இந்த முயற்சி.


4) நான் எழுத்தாளன் அல்ல. பத்திரிக்கையாளனல்ல, அதற்கெல்லாம் முயற்சிக்கவும் இல்லை.  இந்த வலைப்பூவில் எந்ததனிப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ வலிந்து திணித்த எண்ணங்கள், குற்ற புலனாய்வுகள், தனிமனித  விருப்பு வெறுப்புகள் கண்டிப்பாக இருக்காது. ஒரு சாமானிய எளிய மனிதனின் சமூகம் குறித்த கேள்விகள், புரிதல்கள், வலிகள், மகிழ்ச்சிகள், எதிர்பார்ப்புகள், எதிர்ப்புகள், வரவேற்புகள் இப்படிதான்  காணகிடைக்கும்.

5) நான் உங்களிடம் பகிர விரும்புவது என் பார்வைகளையும், என் புரிதல்களையும் தானே தவிர எந்தவித தத்துவங்களோ, கோட்பாடுகளோ, நியதிகளோ இல்லை. ஏனெனில் நான் ஆசிரியனாக இல்லை மாணவனாக, உங்களிடம் கற்கும் மாணவனாக உங்கள் முன் நிற்கின்றேன்.

நன்றி 
சி. இரா. விஜய்